இதையும் தாங்குமா?

எதையும் தாங்கும் இதயம்..
ஆம் எதையும் தாங்கும்!
வான்மழைபோல் வெடிபொருள் சிந்தி மக்கள் சாவதை,
காதல் செய்ததால் கசக்கி எரிக்கப்படுவதை,
கோவிலா மசூதியா என்ற கேள்வியில் கொலைபடுவதை,
கண்காணும் கண்காணா சுவர்களால் காணாதொழிக்கப்படும் ஏழைகள் துயரினை,
நெகிழ்ச்சியில்லா நெஞ்சுடன் நெகிழியில் கடல் ஆமைகள் சாவதை,
நுரையீரலில் நச்சுநுரைகள் பொங்கி மக்கள் சாவதை
என்று எத்தனையோ இன்னல்கள் நம் உலகின் பின்னல்களாக ஆகின.
இதத்தனையும் தாங்கினால் அதன் பெயர் இதயமாகுமா?

Advertisements
Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

சில சிந்தனைகள்

ஓவியர்கள் பேசுவதில்லை

துறவிகள் துறந்து அலுத்தபின்
அனைத்தையும் அள்ளி அணைத்துக்கொள்கிறார்கள்.

அன்னையர் இறுக அணைத்த குழந்தைகளை
பிரிந்து இருக்கத்துடிக்கிறார்கள்.

தந்தையரோ உறவு துறவு இரண்டையும் ஒருங்கே அடைந்து
செயலிலா உறைவில் தியானம் அடைந்திருக்கிறார்கள்.

உலகமோ அழிவுச்சுழற்சியில் தினமும் தன்னைக்கொன்றுகொண்டேயிருக்கிறது
அழியும் சில நொடிகளில் தன் வாழ்நாளையே நிறைத்துக்கொண்டு
மகிழ்வுடன் மரணிக்கின்றன புழுக்கள்.

அழிவோம் புழுவாய்!
வாழ்வோம் மகிழ்வாய்.

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

விருட்சம் – 2

மரம்

 வ்வொரு நூறு ஆண்டுகளுக்கொரு முறை விதைக்குள்ளிருக்கும் புழு தவம் கலைக்கும். “யார்,யார்” என்ற அதன் செபம் நிற்குந்தோரும் ஒருவித முனகலுடன் “அன்னையே!” என்று சுளிப்புடன் அழைக்கும். ஒவ்வொரு முறையும் அன்னை “இன்னும் நேரம் உள்ளது” என்று சொல்வதை அது கேட்டது. உடனே அடுத்த கணம், தன் தவத்தை அது தொடர்ந்தது. திடீரென்று மேலும் சில விதைப்பழங்கள் அதன் மீது வந்து விழுந்தன. விதைகளுக்குள் நின்று புழுக்கள் செய்யும் தவம் பிரபஞ்சத்துக்கே சவாலாக இருந்தது. கருணை கொண்ட அன்னை கல்லின் திசையை மாற்றினாள். புதிய திசையில் ஒரு சூரியன் வெடித்துக்கொண்டிருந்தான். அவன் விரிந்து உண்ட கிரக கோளங்களை சிதற விட்டு ஒரு புள்ளியாக மாறிக்கொண்டிருந்தான். குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பள்ளிப்பேருந்து போல பனியும் அமிலமும் இரும்பும் எரி கோளங்களும் நீராவியும் நிறைந்த ஒரு நொதிக்குழுவான மேகம் கல்லின் மீது மழையெனப்பொழிந்தது. புழுக்களின் விதைகள் மன்னாலும் பனியாலும் மூடப்பட்டன. ஒரு சில புழுக்கள் “அம்மா” என்று கதறின.”அஞ்ச வேண்டாம்” என்ற அபயம் அன்னையிடமிருந்து அவற்றின் காதில் கேட்டது. மீண்டும் தவம் தொடர்ந்தது. பல உலகங்களில் யுகங்கள் உருண்டோடின. பல விண்மீனின் மண்டலங்களில் பல நொடிகள் கடந்தன. புதிய சூர்யர்கள் குழந்தைகளாய்ப்பிறந்தார்கள். பல சூர்யர்கள் இன்மையில் இறுதியை எய்தினர். கல்லோ இப்போது பனிப்பாளங்களும் தாதுப்பாறைகளுமாய் எல்லையில்லா வானில் இலக்கில்லாமல் சுழன்று சென்றது. கல்லினைக்கயிறு ஒன்று கட்டி இழுத்தது. அது ஒரு காமன் கணை. அது பட்டதும் கல் தன் காதலனைக்கண்டுகொண்டது. ஒரு ஒளிப்புள்ளியைச்சிமிட்டியபடி “வா வா” என்று இளமஞ்சள் சூரியன் ஒருவன் காதல் கீதம் பாடிக்கொண்டிருந்தான். புழு ஒன்று அதிர்ந்தபடி “அன்னையே இதுவா?” என்றது. புன்னகையுடன் அன்னை “ஆம்” என்றாள்.(தொடரும்)

சங்கரன்

எழுந்தவுடன் கண்ணாடி பார்ப்பது எனக்கு ஒரு பழக்கம். முன்பொருகாலம் அது ஒருவித கழிவிறக்கத்திற்கான நேரம். எனது கருத்த சருமத்தின் மீது ஒரு வித பச்சாதாபம். அந்த நாளில் எனக்குக்கிடைக்கப்போகும் அத்தனை ஏளனப்பார்வைகளையும் கண்ணாடி முன் நின்று அரை மணி நேரம் ஒரு நாடக ஒத்திகை போல நான் வீசிக்கொள்வேன். அதன் பின் அடுத்த நாள் வரை மனிதர்களின் கண்ணுக்குப்பின்னால் ஒரு வெள்ளைத்திரையே எனக்குத்தெரியும். அது தில்லி காவல்துறையில் நான் கழித்த நரகமான நான்கு ஆண்டுகளில் எனக்கு மிகவும் அவசியமாக ஆனது. 1972இல் நான் ஆலப்புழாவில் இருக்க வேண்டாம் என்று அம்மா என்னை அச்சுதன் பெரியப்பாவின் வீட்டிற்கு அனுப்பிவிட்டாள். “ஸெர்வீசில் சேர்ந்து பொழச்சுக்கோ மோனே” என்றாள். “முன் போல் அம்மையோட வார்த்தைக்கு இங்கே மதிப்பில்லை. யாரும் உன்னை ஏதாவது சொல்றத்துக்குள்ள உன் கெளரவத்தை காப்பாத்திக்கோ” என்று அவள் கண்ணீருடன் சொன்ன போது என்னால் மறுக்க முடியாமல் ஆனது. வெளுத்த தோலுள்ள குடும்பத்தில் மாநிறமென்றாலே நிற்காமல் பேசுபவர்கள் கறுத்த சருமத்தில் ஒரு பையன் என்றால் வார்த்தைகளைப்பார்வைகளாக்கி கத்தியாக வீசுவார்கள். அந்தத்தழும்புகள் ஆறாத புண்கள் போர்த்திக்கொண்ட வேஷங்கள் மட்டுமே. அச்சுதன் பெரியப்பா 2வது போரிலேயே துருக்கி வரை சென்று வந்தவர். அவரைப்பற்றி கதைகள் மட்டுமே கேட்டிருந்தேன். அவர் என்னை “வரட்டும் அவன்” என்று சொல்லி எழுதிய கடிதம் அது வரை நான் வாழ்க்கையில் சந்தித்த வரவேற்புகளின் உச்சம். இந்திய போர் மற்றும் பாதுகாப்புத்துறையின் மூன்று துறைகளுக்கும் படிவம் எடுத்து  விண்ணப்பித்தார். “மனுஷனோட தோலைப்பாக்காத ஒரே ப்ரொஃபெஷன் டிஃபென்ஸ் ஸெர்விஸ் தான்” என்று சொல்லி நம்பிக்கையூட்டினார். லாஜ்பத் நகரின் பூங்காக்களில் என்னை தினமும் ஓட வைத்துக்கொண்டிருந்தார். “இன்னும் ஒசந்திருக்கலாம்” என்பது அவர் மனதிற்குள் சொன்னது என்காதில் கேட்காமல் சொல்வார். ஆனால் வாழ்நாளெல்லாம் அவமானப்படுபவன் பிறர் நினைப்பதைக்கேட்கும் காது கொண்டவன் என்று அவர் அறிய மாட்டார் பாவம். இறுதியாக நடந்த கடற்படைத்தேர்விலும் சிறப்பாகப்போட்டியிட்டாலும் ஒருவித சோர்வையே அடைந்திருந்தேன். ஆனால் நல்லவேளையாக (?) சுப்ரமணியம் அங்கே ஒரு பார்வையாளராக இருந்தார். என்னுடைய பிரச்சனைகளை அணுகும் திறன் காரணமாக அவர் என்னைத்தனிப்பட்டியலில் சேர்த்தார். அது தான் இந்திய உளவுத்துறைக்கான பட்டியல். அதன் பின் பல நாடுகளின் இந்தியத்தூதரகங்களில் பணியாற்றினேன். 38 வருடங்களில் உலகத்தின் அரசியல் அடுக்குகளும் நட்பு விரோதப்போக்குகளும் உள்ளூர் அரசியல்வாதிகளின் கூட்டணி மாறுவது போல் மாறுவதைத்தொடர்ந்து பார்த்து வந்தாலும், 1991-92 முதல் நிகழ்ந்த பொருளதார தாராளமயமாக்கலின் யுகம் அளித்த அனுபவங்கள் மிகவும் புதிரானவை. அதன் ஒரு பகுதியாக ஆஃப்ரிக்கா கண்டம் ஒரு பெரும் மையமாக நமது உளவு அரசியலில் உருவெடுத்தது. கறுப்பு நிறம் இங்கு எனக்கு ஒரு விடுதலையை அளித்தது. ஷர்மாக்களும் சென்களும் ‘சங்கரன் லாமியென் உன் கூடத்தான் பேசனும் என்கிறான். நான் தான் உன் சுபீரியர் ஆஃபிஸர்ன்னு சொல்லலியா?’ என்று கேட்டு ஓயாத நாளில்லை. அவர்களைப்பொருத்தவரை நான் ஒரு கிரேட் 3 ஸ்டெனோ. ஆனால் என்னை அமர்த்தியது ரா என்பதோ அல்லது அவர்களுக்கு முன் அங்கிருந்த பலரை விஜிலென்ஸ் மற்றும் சி.பி.ஐக்காக உளவு பார்த்திருக்கிறேன் என்பதோ அவர்களுக்குத்தெரியாது. இரகசியம் தெரிந்து இருப்பது போன்ற ஒரு போதை வெகு சில விஷயங்களில் தான் கிடைக்கும். என் வேலையில் அது கிடைப்பது அனந்தனின் அருள் தான். அரை மணி நேரம் முடிந்ததும் சரியாக ஒரு குறுஞ்செய்தி செல்பேசியில்.”இண்டியன் எஞ்சினியர் மிஸ்ஸிங்.ஆஸ்ஸெட்(asset) கன்ஸிடர்ட் க்ரூஷியல்”.உடனே ப்ரத்யேக எண்ணில் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். எதிர் முனையில் ரமேஷன் நம்பியார், மென்மையான குரலில் “எஞ்சினீர் பேரு விஜய், விஜயராகவன்” என்று சொன்னார்.(தொடரும்)

Posted in தொடர் நாவல், Uncategorized | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

விருட்சம் – 1

 

மரம்

ஆதியில் ஒரு மரம் இருந்தது. அது இருந்த போது வேறு என்னவெல்லாம் இருந்தது என்று எனக்குத்தெரியாது. அதைப்பற்றி மரம் எனக்கு ஒன்றும் சொல்லவில்லை. சொல்லியிருந்தாலும் அது என்னோடு பேசும் தருணங்கள் கொஞ்சம் மயக்கமானவை என்பதால் நான் மறந்துமிருக்கலாம். அதைப்பின்பு பார்த்துக்கொள்ளலாம். நான் என்ன சொன்னேன்? ஸ்ஸ்..  ஹாங் .. மரம்.ஒரேயொரு மரம். அது மட்டுமே இருந்தது. அது இந்த பூமியில் நாம் பார்க்கும் மரம் போலல்ல.. இலைகள் கிடையாது. வெறும் வெள்ளெலும்பு மரம். ஒவ்வொரு நூறு ஆண்டுகளில் அதன் கிளைகளில் ஒரு சிவப்புப்பழம் முளைக்கும். பழமா? பூ பூக்குமா அல்லது நேரடியாகவே பழமாகுமா? இந்தக்கேள்விகளையும் நான் கேட்டிருப்பேன். மரமும் பதில் சொல்லியிருக்கும். ஆனால் மறந்து போயிருப்பேன்.. இல்லையென்றால், மரம் பின்னால் என் நினைவுக்குக்கொண்டு வரும். நான் இது போன்ற கேள்விகள் கேட்பவன் தான்.பதிலையும் மூளையில் பதித்து வைத்துக்கொள்ளக்கூடியவன் தான். ஆனால் மரம் விஷயத்தில் நான் வேறு மாதிரி. அதைப்பற்றி முன்பு சொன்னது போல, பின்பு பார்த்துக்கொள்ளலாம். அந்தச்சிவப்புப்பழத்திற்குள் ஆயிரம் புழுக்கள் இருக்கும். அந்தப்புழுக்கள் நெளியாதவை, பழத்தில் இருக்கும் வரை. அந்தப்பழம் 10 ஆண்டுகளுக்குப்பின் மண் விழும்.

மண் என்றால்.. விண் தான் அதன் மண். அங்கிருந்து விழுந்த பழம் விண்ணிலெங்கும் உடைந்து சிதறும். ஏன் என்று எனக்குத்தெரியாது. மரம் அதைச்சரியாக எனக்குக்காட்டவில்லை. என்னது? மரம் எப்படி காட்டியதா?
மரம் எப்படிப்பேசியது என்பதே எனக்குச்சரியாக நினைவில் இல்லை.இதையும் பின்பு பார்த்துக்கொள்ளலாம்.
அடிப்பக்கத்தில் பின்பு பார்த்துக்கொள்ளலாம் என்று ஒரு பட்டியல் போட்டுக்கொள்ள வேண்டும்.. இல்லையென்றால் எல்லாம் மறந்து போய்விடும். லலிதாவுக்கு ஃபோனில் பேசவேண்டும் என்று என் டயரியின் ஒவ்வொரு பக்கத்திலும் சிவப்பில் எழுதியிருப்பது போல. அப்படிச்சிதறிய ஒவ்வொரு புழுவும் ஒரு விதைக்குள் இருந்தது. அந்த விதைக்கோ வெளியில் பறக்கும் இறக்கைகள் உண்டு. அந்த விதை ஒரு கல்லின் மீது விழுந்தது. கல்லோ இலக்கில்லாமல் விழுந்து கொண்டிருந்தது. விழும் போது இன்னொரு பெரிய கல்லின் மீது விழுந்தது. அந்தப்பெரிய கல் இதைவிட லட்சம் மடங்கு பெரியது. அதனால் இந்தக்கல் கோபமுடன் சத்தம் போட்டதை அது கண்டு கொள்ளவில்லை. புழுவோ கல்லையும் அது விழுந்து கிடந்த பெரிய கல்லயும் பற்றி லட்சியம் செய்யாமல் நீண்ட தவத்தில் இருந்தது. (தொடரும்)

 நான்

என் பெயர் விஜயராகவன். நான் பிறந்தது செய்யாறு அருகில் ஒரு கிராமத்தில். சுமாராகப்படிக்கும் நான் செய்யாறில் ‘அதிபுத்திசாலி’ என்று மெச்சப்பட்டேன். அம்மா இறந்த பின் மாமா என்னை சென்னைக்கு அழைத்துவந்தார். மாமா என் அப்பாவிடம் அதிக பக்தி கொண்டவர். அப்பாவை நான் பார்த்ததில்லை. யாரோ அவர் மண்டையில் கழியால் ஒரு போடு போட்டதால் பிராணனை விட்டு விட்டார். மூவுலகையும் போஷிக்கும் பெருமாள் நல்லவர்களுக்குக்கழியைத்தாங்கும் மண்டையையும் படைத்திருக்கலாம். பெருமாளை நொந்து கொண்டால் அம்மாவுக்குப்பிடிக்காது. வைவாள். என்னையும் அடிக்கடி திட்டுவாள். அப்பாவைக்கொன்றது நான் தான் என்று ஒருமுறை சொன்னாள். நான் ரொம்ப நேரம் அழுதேன். பிறகு என் காலில் விழுந்து ஷமிச்சுக்கோ என்றாள். 1 வாரம் கழித்து ஊர் குட்டையில் நீந்தத்தெரியாமல் நீந்தி பிராணனை விட்டாள். மாமா வந்து என்னைப்பெரிய ஜன்னல் பஸ்சில் அழைத்துக்கொண்டு சென்னை வந்த போது எனக்கு வயது 9.

மாமா இருந்தது திருவல்லிக்கேணியில் ஒரு மான்ஷனில். அதன் பெயர் நினைவில் இல்லை. ஆனால் தெருவில் குறுக்கும் நெடுக்குமாக இத்தனை சந்தும் ஒவ்வொரு மாடியிலும் அதைப்போலவே ஆடுபுலி ஆட்டக்கட்டம் போல சந்துகளுமாய் ஒரு கட்டடத்தை அப்போது தான் பார்த்தேன். ஒரு நாள் எங்கேயோ ஒரு ஆள் என்னை அழைத்துப்போக, மாமா என்னை ‘விஜய்’ என்று கத்தி அழைக்க நான் அவரைக்கண்டு பிடித்து ‘என்ன மாமா’ என்று கேட்பதற்கு வழி தேடி நான் பட்ட பாடு கொஞ்சநஞ்சமில்லை. ஆனால் அந்த ஆளை அதன் பின் நான் பார்க்கவில்லை. மாமாவும் ‘எங்கேடா போய்த்தொலைஞ்சாய்’ என்று என்னை வெளுத்துக்கட்டினார். ஒரு வாரம் கழித்து நுங்கம் பாக்கத்தில் ஒரு மாடி வீட்டில் வாடகைக்குக்குடி பெயர்ந்தோம். இரண்டே பெட்டியானதால் பச்சை நிற பல்லவன் பஸ்சில் காற்றாட ஒரு அதிகாலையில் சென்றோம். அந்தப்புதிய வீட்டில் தான் மாமி இருந்தாள் கீழ் போர்ஷனில்.(தொடரும்)

 

 

Posted in தொடர் நாவல், Uncategorized | Tagged , , | 1 பின்னூட்டம்

கடந்து செல்லல்

சூரியன் – அவன் உலகத்தை நமக்குக்காட்டும் ஆசான்.
பகல் – அவன் நமக்கு அருள் புரியும் நேரம்.
இரவு – அவன் நம்மைப்பார்க்காத நீள்தருணம்.
இரவு நேரம் இரவியிலி நேரம்.
பகலில் நாம் வேடமிட்டு அவன் முன் நடிக்கிறோம்.
அவன் வெப்பமெனும் கைகள் தட்டி நம்மை வாழ்த்துகிறான்.

இரவு நேரம் – அவன் ஒற்றைக்கண் சொக்கியதும்
மேடை வெளிச்சம் அணைந்ததும்
பிரபஞ்சம் வெட்ட வெளிச்சமாகிறது.
பகலில் நாம் காட்சிப்பொருளாகிறோம்.
நம் ஆசான் என்று வணங்கும் ஆதவன்
இந்த அண்டத்திற்கு நம்மைப்படைக்கிறான்.
இரவு இந்த அண்டத்தை நாம் பலிகொள்கிறோம்.
நாம் கடவுளாகி நின்று இந்தப்பிரபஞ்சக்கூத்தை
வானரங்கில் காண்கிறோம்.

சூரியனின் காலடி மட்டும் போதுமென்றால்
இந்த அண்டத்தை இழக்க வேண்டியது தான்.
இரவு நம்மை அப்பாலைப்பற்றி
சிந்திக்க வைக்கிறது.
அண்டத்தை அண்மையாக்கிக்காட்டுகிறது.

ஒரு குரு சரணமென்றிருந்தால்
நாம் வெறும் காட்சிப்பொருள் மட்டும் தான்.
கடவுளாக வேண்டுமென்றால்
குருவையும் கடக்க வேண்டும்.
இரவு நம்மைச்சூரியனையும் கடக்கப்பணிக்கிறது.
இரவைப்போற்றுவேன்.
இருளைப்போற்றுவேன்.
கடந்து செல்லல் தான் பயணத்தில் சுகம்.

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தலைமுறைகள்.

இந்தப்படம் நான் இருக்கும் நகரத்தில் வெளியாகவில்லை.
எனவே இப்போது தான் ஜெயா டிவியில் பார்த்தேன்.
மிகவும் இரத்தினச்சுருக்கமாக, தனக்கே உரிய யதார்த்த பாணியில்
பாலு மகேந்திரா எடுத்திருக்கும் படம். இந்தப்படத்தைக்குறித்து
எதிர்மறையான விமரிசனங்களை பாலுவின் நண்பர்களே அவர்
இறுதியஞ்சலிக்கட்டுரைகளில் தெரிவித்திருந்தனர். அற்புதமான நண்பர்கள் அவருக்கு.
சுவாரசியமில்லாமல் அமர்ந்து பார்த்தேன். முக்கியமாக என் இரு குழந்தைகளுடனும்
மனைவியுடனும் அமர்ந்து பார்த்தேன். படம் முடிந்ததும் அனைவரின் கண்களிலும்
கண்ணீர். நெஞ்சம் நிறைந்த நிறைவு, அவர் படங்களிலேயே இது தான்
குடும்பத்தினர் அனைவருக்குமான படம். குறிப்பாகக்குழந்தைகளுக்கு.
எந்தவிதமான சாமார்த்தியப்பின்னல்களும் திரைக்கதை மேஜிக்குகளும்
இல்லாத 80களின் நவீன பாணி படம்.
மூன்று தலைமுறையினர் தங்கள் தெளிவுகளை அடைகிறார்கள்.
முதல் தலைமுறை முக்தியையும், இரண்டாம் தலைமுறை தன் குற்றவுணர்ச்சியிலிருந்து
விடுதலையும், மூன்றாம் தலைமுறை தன் அடையாளத்தையும் 6 மாத கால
சம்பாஷனை மூலம் அடைகிறார்கள்.
அற்புதமான படப்பிடிப்பு, உறுத்தலேயில்லாத
 வசனங்கள். நதியின் ஓட்டம் போன்ற பிண்ணணியிசை.
குறிப்பாக ஒரு இடம் – பேறு வலி வந்து மூத்த மகள் கிளம்பும் காட்சியில்
 ஒரு வித கலவரமூட்டும் இசை – அதைச்செய்ய இளையராஜாவால் மட்டுமே முடியும்.
அது போலவே லக்ஷ்மணன் இறந்த பின் தன் தாத்தாவும் இறந்து விடுவாரோ என்று ஆதி கலவரமுறும்
காட்சியிலும் – எப்படித்தான் சாத்தியமாகிறதோ இந்த ராட்சசருக்கு?
நடிப்பு என்றால் பாலுவின் படத்தில் என்ன நேர்த்தியும் அழகும் இருக்குமோ
அது ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு நடிகரிலும். மிகப்பெரிய செய்திகளை மிக எளிமையாக
சொல்லி கடந்து செல்லும் போது, நாம் நிஜத்திலேயே அந்த விஷயங்களை எத்துணை
 சிக்கலாகப்புரிந்துகொண்டிருக்கின்றோம் என்பதை நமக்குப்புரிய வைக்கிறது.
(உ-ம் – 1) வீட்டு பூசையறையில் ஏசுபிரானின் படம் – மொத்தம் இரண்டே ஷாட்டுகளில்
எந்தக்குறும்படத்தையும் விட வீர்யமாக சொல்லியிருக்கும்.
(உ-ம் -2) லக்ஷ்மணன் வந்து ‘ஏம்பா இந்த ஜாதியெல்லாத்தையும் விட்டுட்டியா’ என்று வினவும் காட்சியில்
கூறும் பதிலும், மிக நேரிடையாக, எளிமையாக இருக்கும்.
இது அவர் பாணியில் அமைந்தது இல்லை. பூடகங்களாகவோ குறியீடுகளாலோ
 எதையும் சொல்லவில்லை. ஒரு குழந்தையிடம் பேசுவது போலவே அமைந்திருக்கும் படம்.
அதனாலேயே மிகவும் நேர்மையான அழகான படம். அது மிகவும் சிக்கலான அமைப்பை விரும்பும்
இரசிகர்களுக்கானதல்ல. சாமான்யர்களுக்கு மிகவும் நேரிடையாக விஷயங்களை சொல்லும் படம்.
நிஜமாகவே இது பாலுமகேந்திரா என்னும் கலைஞன் நம்முடன் நடாத்தும் ஒரு
உரையாடல்.ஆனால் மற்ற உரையாடல்களைப்போல் நம் கேள்விகளுக்கு
 பதில் சொல்லும் விதமான இரு தரப்பு பேச்சுவார்த்தையல்ல.
தான் போவதற்குள் தான் சொல்லத்தவறிய அல்லது சொல்வதற்கு நேரம் போதாமையால்
விடுபட்ட அத்தனை விஷயங்களையும் ஒரே மூச்சில், அதேசமயம் இரைச்சலின்றி
நிதானமாக சொல்லும் படம்.
இதுவரை சாகாவரம் பெற்ற பல பாத்திரங்களை ஸ்ருஷ்டித்த பாலு ஒரு இறுதி முயற்சியில்
தன்னையும் ஒரு அமரத்துவம் பெற்ற பாத்திரமாக படைத்து மறைகிறார்.
இதில் பங்குபெற்ற அனைவருக்கும் சிரம்தாழ்த்திய நன்றிகள்!.
Posted in Uncategorized | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எனக்கு நானே சொல்லிக்கொண்டது..

 
 

கருமாரி பெயர் சொல்லி வணங்கு

காரியத்தில் பின் நீ இறங்கு

நிகழ்தகவுகள் அனைத்தும் அவளரருளென்று உணர்ந்து
 
பேரன்பை செய்து அமைதியிலே உறங்கு.

 

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக